உப்பு உற்பத்தி


விழுப்புரம் மாவட்டம்,  மரக்காணம் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான உப்புளங்கள் உள்ளன. இந்த உப்பளங்களிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு, மாநிலம் மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்குவது வழக்கம். இதனைத் தொடர்ந்து,  தைப்பொங்கல் அன்று முதன் முதலாக உப்பு எடுத்து சூரியனுக்கு படையல் செய்வதும் வழக்கம். இங்கு பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. இதன் காரணமாகவே இப்பகுதியில் உப்புத் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.  இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 


முதற்கட்ட பணிகள் துவக்கம் 


ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி ஜனவரி மாதத்தில் கன மழை பெய்தது. இந்த கனமழையால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி கடல் போல் காட்சியளித்தன. இந்த மழை நீரானது தற்பொழுது தான் வடிய துவங்கியுள்ளது. இந்நிலையில்,  மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகளான உப்பு பாத்தி கட்டுதல்,  கால்வாய்கள் அமைத்தல்,  சேர் மிதித்தல் போன்ற பணிகளில் உப்பளத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ள நிலையில், மீண்டும் மழை பெய்யாமல் இருந்தால் வரும் 20 நாட்களுக்குள் உப்பு உற்பத்தி செய்யப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் உப்புத்தொழில் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும். மற்ற ஆறு மாதங்கள் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் நிலை உள்ளது. 


நிவாரணத் தொகை


இதனால், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல் உப்பலள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ 5 ஆயிரம் வழங்கியது. ஆனால்,  இந்தத் தொகையானது கடந்த ஆண்டு அனைவருக்கும் கிடைத்தது. இந்த வருடத்திற்கான நிவாரணத் தொகை இதுவரையில் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் நலன் கருதி விடுபட்டவர்களுக்கும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.