விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் விதிமுறைகள் வெளியீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


விநாயகர் சிலைகள் கரைக்கும் விதிமுறைகள்


விழுப்புரம் மாவட்டத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அனுசரிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. கலெக்டர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) பரிந்துரைத்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம்:


விழாவில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடாது என்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார் கலெக்டர். நீர் நிலைகள் மற்றும் பிற இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளையே கரைக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அனுமதிக்கப்படும் சிலை வகைகள்:



  •  களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள்

  • பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற செயற்கை மற்றும் மாசுபடுத்தும் பொருட்கள் கலக்கப்படாத சிலைகள்

  • இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள்


சிலைகளின் அலங்காரத் தேவைக்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசின் போன்ற பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம், நீர் நிலைகள் மற்றும் மண் மாசுபடாமல் தடுக்க முடியும்.


சாயங்கள் மற்றும் பூச்சுகள் தொடர்பான கட்டுப்பாடுகள்:


சிலைகளுக்கு பூசப்படும் வண்ணங்களில் நச்சுப்பொருட்கள், எண்ணெய் சார்ந்த ரசாயனங்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாற்றாக, நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.


சிலைகள் கரைக்கும் இடங்கள்:


விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய இடங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னதாகவே குறித்துள்ளது. பொதுமக்கள் அவை தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி சிலைகளை எந்தவொரு நீர் நிலையிலும் கரைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.


சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் விழாக்கள் வேண்டியது காலத்தின் அவசியம்:


இவ்வாறு வெளியான அறிவிப்பின் மூலம், விநாயகர் சதுர்த்தி போன்ற பெருவிழாக்களை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நடத்தும் பண்பாட்டு மாற்றம் தேவையாக இருப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு, இயற்கையையும் பாரம்பரியத்தையும் ஒருசேர காக்கும் முயற்சியில் இணைவதே நல்வழி என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.


விநாயகர் சதுர்த்தி


முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளையே விநாயகர் சதுர்த்தியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. விநாயகர் அவதரித்த திதி என்பதால் அனைத்து மாதங்களிலும் வரும் சதுர்த்தி தினம் விநாயகப் பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் அருளைப் பெருவதற்காக அனைத்து சதுர்த்தி தினங்களிலும் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை துன்பங்களை நீக்கும் ஆற்றல் படைத்த சங்கடஹர சதுர்த்தியாக பக்தர்கள் வழிபடுகிறார்கள்.


புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த நாளில் துவங்கினால் வெற்றிகள் அதிகரிக்கும்!


இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருகிறது. விநாயகப் பெருமான், ஞானத்தின் உருவமாக ஓம்கார வடிவமாக திகழ்பவர். அவரது அவதார தினம், புத்திகாரகன் என போற்றப்படும் புதன்கிழமையில் வருவது மிக மிக விசேஷமானதாகும். ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 03.52 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது. அதே போல் ஆகஸ்ட் 27ம் தேதி காலையில் அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் வருகிறது. இந்த இரண்டு நட்சத்திரங்களும் புதன் பகவானை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசியில் வரக் கூடியவை.


அது மட்டுமல்ல அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் காயத்ரி தேவி. அதே போல் சித்திரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சக்கரத்தாழ்வார். இவர்கள் இருவருமே ஞானம், வெற்றி, ஆன்மிக பாதுகாப்பையும், தெய்வீக பலத்தையும் தரக் கூடிய தெய்வங்கள். இந்த தெய்வங்களுக்கு உரிய நாளில் விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். இது காரிய வெற்றியை வாரி வழங்கக் கூடிய அற்புதமான நாளாகும். காரிய தடைகளை அதிகம் சந்திப்பவர்கள், புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த நாளில் துவங்கினால் வெற்றிகள் அதிகரிக்கும்.