விழுப்புரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் மீட்பு பயணத்தில் "டாஸ்மாக் வருடத்துக்கு 4500 கோடி ரூபாய் ஊழல்” என்று பேசினார்.
6 லட்சம் பெண்களை வாழவைத்த அரசு அதிமுக அரசு
விழுப்புரத்தைத் தொடர்ந்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே மக்களைச் சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது '' ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். பசுமை வீடு கட்டி கொடுத்தோம். ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டம் கொடுத்தோம். 6 லட்சம் பெண்களை வாழவைத்த அரசு அதிமுக அரசு.
இன்று ஒரு பவுன் 70,000 ரூபாய். அதை முன்கூட்டியே யோசித்துதான் அம்மா திட்டம் கொண்டுவந்தார். மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம் அது உனக்கு என்ன வலிக்குது. நம்மை எல்லாம் பெறாத தாயான புரட்சித் தலைவி ஆட்சியில் 52,35,000 பேருக்கு லேப்டாப் கொடுத்தோம்.
ஏழைகள் உயர்கல்வி படிப்பதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர் ஸ்டாலின். அரசு பள்ளியில் 2019ல் வெறும் 9 பேர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றனர். ஏழை மாணவரும் மருத்துவராக வேண்டும் என்பதால் 7.5% கொண்டுவந்தோம். 2818 பேர் பயின்று வருகிறார்கள். ஒரு ரூபாய் செலவில்லாமல் அரசே கட்டணம் செலுத்தும் என திட்டம் கொண்டுவந்தோம். இப்படி ஒரு சாதனையாவது திமுக ஆட்சியில் சொல்ல முடியுமா?
525 வாக்குறுதி கொடுத்ததில் எதை நிறைவேற்றினார்?
விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி, 67 கலைக் கல்லூரி, 21 பாலிடெக்னிக், 5 வேளாண் கல்லூரி கொடுத்தோம். ஏழை மாணவர்கள் படிக்க அடித்தளம் அமைத்தது அதிமுக அரசு. 525 வாக்குறுதி கொடுத்ததில் எதை நிறைவேற்றினார்? 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்று ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். 100 நாள் 50 நாளாக குறைந்து போனது.
நான் போய் மத்திய அரசுகிட்ட கேட்டு 2991 கோடி வாங்கிக்கொடுத்தேன், திமுக அரசு நடத்துது, அதிமுக நிதி பெற்று கொடுக்குது. நிதி பெறவும் திறமையான அரசு வேண்டும். கிராமப் பகுதி மேம்பாடு அடைய நிறைய திட்டம் கொடுத்தோம்.
பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு 28 மாதம் தொடர்ந்து நான் சட்டமன்றத்தில் பேசினேன். அதிமுக எம்.எல்.ஏக்கள் கேட்டனர், பொதுக்கூட்டத்தில் கேட்டனர். தொடர் வற்புறுத்தலில்தான் கொடுத்தார். மக்கள் செல்வாக்கு போய்விட்டதால் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கிறேன் என்கிறார். மீதி 8 மாதம் தான் இருக்குது, மக்களுக்காக கொடுக்கலை 2026 தேர்தலை நோக்கி பெண்களை ஏமாற்ற கொடுக்கிறார்கள்.
மக்களைப் பேசி பேசி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து ஏமாற்றுகிறார்
அதிமுக தேர்தல் அறிக்கையில் மாதம் 1500 ரூபாய் கொடுக்கிறோம் என்றோம். ஆனால் மக்கள் சரியான சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. மக்களைப் பேசி பேசி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து ஏமாற்றுகிறார். இது பேரூராட்சி பகுதி. மின்கட்டணம், குடிநீர் வரி, குப்பை வரி, விலை வாசி உயர்வு, மளிகைப் பொருள் விலை உயர்வு ஆனால் மக்களுக்கு வருமானம் குறைந்தது. இந்த ஆட்சியில் துன்பம்தான் கிடைத்தது மக்களுக்கு. எங்க பார்த்தாலும் போதைப் பொருள் ஊர் பூரா கஞ்சா விற்பனை நடக்கிறது. நான் எவ்வளவோ பேசியும் கேட்கல.
இப்ப முதல்வரே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று முதல்வரே சொல்கிறார். நான் சொல்லும்போதே கேட்டிருந்தால் அப்படி சொல்லத் தேவையில்லை. போதை ஆசாமிகளால்தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை நடக்கிறது. இதற்கெல்லாம் முடிவுகட்ட 2026ல் அதிமுக ஆட்சி மலர வேண்டும். நிறைய பள்ளிகளைத் திறந்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கியது தமிழ்நாடு. அதிமுக ஆட்சியில் பள்ளியில் தரம் உயர்த்தினோம். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தரம் உயர்த்தினோம்.
வீடு இனிமே கனவில் தான் கட்ட வேண்டும் அந்தளவுக்கு ஜல்லி, எம்சாண்ட், செங்கல், மரம், சிமெண்ட் எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2500 கொடுக்கிறேன் என்று சொன்னார்கள், கொடுத்தார்களா?
கரும்புக்கு டன்னுக்கு 4000 கொடுப்பேன் என்றனர் கொடுத்தார்களா? விவசாயிகளுக்குப் பட்டை நாமம் போட்டுவிட்டது திமுக. குடும்ப ஆட்சி, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இப்ப இன்பநிதி.குடும்ப நிதிக்கு முடிவு கட்டும் தேர்தல். அதிமுக தான் ஜனநாயக கட்சி. அதனால்தான் சண்முகம் அமைச்சரானார், நான் உங்களால் முதல்வரானேன். திமுகவில் இருந்தால் இப்படி நடக்குமா?
வருடத்திற்கு 4500 கோடி ஊழல் இதில் பெரிய பெரிய தலைகள் எல்லாம் சிக்கப்போகுது.
கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். 10 ரூபாய்க்கு செந்தில் பாலாஜியால் மதிப்பு வந்துவிட்டது. 10 ரூபாய் என்றாலே பாலாஜி பெயர்தான் வருகிறது. ஏழை எளியோர் உடல் வலிக்காக குடிக்கிறார்கள், அதுல 10 ரூபாய் கொள்ளை. ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்குது, 15 கோடி ஒரு நாள், மாதம் 450 கோடி ஊழல். வருடத்திற்கு 4500 கோடி. இதில் பெரிய பெரிய தலைகள் எல்லாம் சிக்கப்போகுது.
உங்களுடன் ஸ்டாலின் நோட்டீஸ் கொண்டுவருவார்கள். நான்கரை ஆண்டுகள் ஆனது இப்பத்தான் மக்கள் பற்றி ஞாபகம் வருதா? கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழுத்திருக்கிறார். இப்படித்தான் 2021ல் மனுவை பெட்டிக்குள் போடுங்க என்றார். ஆட்சிக்கு வந்து குறைகளை தீர்ப்போம் என்றார், அது என்ன ஆனது? சாவி தொலைந்துபோனதா? மக்களே ஏமாந்துவிடாதீர்கள். நம்பிடாதீங்க. கவர்ச்சிகரமாக பேசுவார்கள்.
வரக்கூடிய தேர்தல் முக்கியமான தேர்தல் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளுக்கு அவர்களின் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க. நடப்பது ஸ்டாலின் மாடல் அரசு இல்லை, ஃபெயிலியர் மாடல் அரசு! அதிமுக வரலாறு திரும்புகிறது, தமிழ்நாடு அதை விரும்புகிறது...'" என்று பேசினார்.