விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சித்தலிங்கமடத்தில், திருக்கோவிலூர்-சென்னை புதிய வழித்தடத்திலும் மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியம், நெற்குணத்தில், திருக்கோவிலூர் - அருமலை புதிய வழித்தடத்தில், பேருந்து சேவைகளை இன்று (23.11.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


உயர்கல்வித்துறை அமைச்சர்  தெரிவிக்கையில்,  விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையும், பல்வேறு கிராமப்புற பகுதிகளிலிருந்து நகர்ப்புற பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர். அதனடிப்படையில், இன்றைய தினம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சித்தலிங்கமடத்தில், திருக்கோவிலூர் - சென்னை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் பேருந்தானது திருக்கோவிலூரில் தொடங்கி சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லூர், ஏனாதிமங்கலம், விழுப்புரம், திண்டிவனம் அடுத்து சென்னை சென்றடையும்.


இதன் மூலம், சென்னை நகர்பகுதிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்கு செல்வோர்கள் ஆகியோர்களின் பயணம் எளிதாக அமைந்திடும். தொடர்ந்து, முகையூர் ஊராட்சி ஒன்றியம், சித்தலிங்கமடத்தில், திருக்கோவிலூர் - அருமலை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் பேருந்தானது திருக்கோவிலூரில் தொடங்கி நெற்குணம், ஏமப்பேர் அடுத்து அருமலை சென்றடையும். இதன் மூலம், பிற பகுதிகளுக்கு செல்வோர்களின் பயணம் எளிதாக அமைந்திடும். முன்னதாக, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி, காந்தி குப்பத்தில், ரூ.7.00/- இலட்சம் மதிப்பிட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பயணியர் நிழற்குடை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் கிராமங்கள் தோறும் சாலை வசதி ஏற்படுத்திட வேண்டும். சாலை வசதியோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி நகர்பகுதிக்கு சென்றிடும் வகையில், கூடுதல் பேருந்து வசதி மற்றும் புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டு, கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.