தமிழ்நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள பழைய கருவாச்சி கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னதாக கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்துக் காட்டினார். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஆறுமுகம், மனைவி வள்ளியை கடந்த மே மாதம் 30ஆம் தேதி சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மது பாட்டில் விற்பனை செய்ததாக கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனை அடுத்து ஜூன் மாதம் 23ஆம் தேதி வள்ளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். ஆனால் கிராம ஊராட்சியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வள்ளி சிறையில் இருந்த நாட்களில் வேலை செய்ததாக பணம் பெறப்பட்டு உள்ளது. மேலும் அதே கிராமத்தில் உயிரிழந்த சிலரின் பெயரில் வேலை நடைபெற்று பணம் பெறப்பட்டதாகவும் மேலும் சாராய வியாபாரியின் குடும்பத்தில் ஒரு சிலர் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள் மாறாட்டம் செய்ததாகவும் இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உறுதுணையாக இருந்துள்ளார் என முன்னாள் திமுக பிரமுகர் கதிரேசன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இதனால் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நிரந்தர ஊராட்சி செயலாளர் இல்லாததால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது என கூறி மழை பெய்ய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்றார்.


இதனை எடுத்து பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் கலைந்து வீட்டிற்கு சென்ற நிலையில் வீட்டிலிருந்து ஒன்றிய குழு உறுப்பினர் சௌபாக்கியாவதி மற்றும் அவரது கணவர் கதிரேசன் ஆகியோர் விவசாய நிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாராய வியாபாரி வள்ளி அவரது கணவர் ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றிய குழு உறுப்பினர் சௌபாக்கியவதி மற்றும் அவரது கணவரான கதிரேசனை வழிமறித்து தகாத முறையில் பேசி தாக்கியதாகவும் இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் காயமடைந்த இரு தரப்பினரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.