விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு உள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?  என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


நடமாடும் ஆலோசனை மையம்


தமிழ்நாட்டில் தற்போது மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது. 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அச்சப்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் தற்கொலை நிகழ்வுகள் ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடமாடும் ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டது.



மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் 


ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து இந்த நடமாடும் ஆலோசனை மையம் செயல்பட்டு வந்தது. தற்கொலை தடுப்பு ஆலோசனைகள் மட்டுமின்றி, மாணவ-மாணவிகளின் குடும்ப நலன் சார்ந்த ஆலோசனைகள், மாணவிகளுக்கு உடல் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் ரீதியான பிரச்சினைகளை கையாளும் முறைகள் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் வகையில் ஆற்றுப்படுத்துதலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் ஒரு வாகனம் மூலம் சென்று வந்தன. இதற்காக தனியாக பள்ளிக்கல்வித்துறை மூலம் வாகனங்களும் ஒதுக்கப்பட்டன. அதற்கான வாகனங்களும் பயன்படுத்தப்படாமல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.  




கேட்பாரின்றி கிடக்கும் நடமாடும் ஆலோசனை மைய வாகனம்


2 ஆண்டுகளுக்கும் மேலாக நடமாடும் ஆலோசனை மைய வாகனங்கள் இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்ததால் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இந்த வாகனம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கேட்பாரின்றி கிடக்கும் இந்த வாகனம் செயல்பாட்டுக்கு வருமா? என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தற்போதைய நிலையில் மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக தயார் படுத்த மனநல ஆலோசனை மிகவும் அவசியம். மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடமாடும் ஆலோசனை மையங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.