விழுப்புரம்: சசிகலா தலைமையில் ஒன்றிணைவோம், பிரிந்திருக்கும் அவரவர் தலைமைக்கு எடுத்துரைத்து கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்து விழுப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

அஇஅதிமுக பிளவுப்பட்டுள்ளதால் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றி சசிக்கலா தலைமையில் ஒன்றினைய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக விழுப்புரத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

விழுப்புரம் நகரில் உள்ள கிழக்கு பாண்டி சாலை, காந்தி சிலை, திருவிக வீதி, நேருஜி வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு முக்கிய இடங்களிலும் ஓட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் அஇஅதிமுக தூண்களாக விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் சசிக்கலா அவர்களின் புகைப்படங்களுடன் அஇஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுள்ள இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி.தினகரன், ஏ.சி.சண்முகம் ஆகியோரின் புகைப்படங்களையும் அச்சிட்டு, அவரவர் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து பிரிந்திருக்கும் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே சசிக்கலா மற்றும் கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம் என்றும்,

 

தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காத்திட சசிக்கலா தலைமையில் ஒன்றிணைவோம் என்று சபதம் ஏற்போம் என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளை அஇஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் மற்றும் புதிய நீதிக் கட்சி தலைவராக உள்ள ஏ.சி.சண்முகம் ஆகியோர் அணியில் உள்ள நிர்வாகிகளால் இணைந்து ஒட்டப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களிலும் ஓட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.