விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள பனங்குப்பம் புதுநகரில் 30 வருடங்களுக்கு மேலாக சுடுகாடு இல்லாததால் சுடுகாடு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் உயிரிழந்தவரின் சடலத்தை கோலியனூர் கூட்ரோடு பகுதியில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள பனங்குப்பம் புதுநகர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களை எரிக்கவும், புதைக்கவும் சுடுகாடு இல்லாததால் அதே பகுதியிலுள்ள நரையூரான் வாய்க்காலில் உடலை எரிக்கவும் புதைக்கவும் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இப்பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் மழைக்காலங்களில் உயிரிழந்து விட்டால் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் இடமில்லாமல் கிராம மக்கள் அருகிலுள்ள கோலியனூர் பஞ்சாயத்து சுடுகாட்டினை பயன்படுத்தி வருவதால் இரு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகின்றன.


பனங்குப்பம் புதுநகர் பகுதிக்கு நிரந்தரமாக சுடுகாடு அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் தீர்வு கிடைக்காததால் உடல்நலக் குறைவால் இறந்த கருணாநிதி என்பவரின் உடலை கோலியனூர் கூட்ரோடு பகுதியில் விழுப்புரம் புதுச்சேரி செல்லும் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சுடுகாடு அமைக்க செல்வகுமார் என்பவரிடமிருந்து 20 செண்ட் நிலத்தை அளவீடு செய்தும் அதற்கான உரிய தொகை வழங்காததால் சுடுகாடு அமைக்கும் பணி தாமதப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இறந்த கருணாநிதி தான் இறந்தால் தன் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்திவிட்டு இறந்துள்ளதால் உறவினர்கள் கிராம மக்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். 


அப்பொழுது சடலத்தின் முன்பாக கட்டப்பட்ட பேனரில் " மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் பனங்குப்பம் பஞ்சாயத்துக்கும் உட்பட்ட எங்களது கிராமம் பணம் குப்பம் புதிய காலனியில் காலம் காலமாக சுடுகாடு இல்லை, எனவே ஐயா அவர்கள் எங்களுக்கு சுடுகாடு அமைத்துத் தருமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்". என்கின்ற பதாகையை சடலத்தின் முன்பு கட்டப்பட்டு எடுத்துச் சென்றனர்.


அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வர்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் இருந்து விலகி இறந்தவரின் சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இடுகாடு மற்றும் சுடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.