விழுப்புரம்: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 1500 ரூபாய் மாத ஊதியத்திற்கு பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களுக்கு மாத சம்பளம் 18 ஆயிரம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை முதல் வாரத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விழுப்புரத்தில் அரசாங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

கடைநிலை ஊழியர்களுக்கு வேலை நேரம் அதிகமாக உள்ளது


விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பேரவை கூட்டம் அரசங்கத்தின் பொதுச்செயலாளர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய சாந்தி, ”அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு வேலை நேரம் அதிகமாக உள்ளது. அதனை மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதனை தமிழக அரசு ஏற்று சுழற்சி முறையினை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊதிய உயர்வும் பணி பாதுகாப்பு வேண்டும் 


சுழற்சி முறையை காலை 6 மணிக்கு பதிலாக, காலை 7 மணிக்கு மாற்ற வேண்டும். பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கு வெவ்வேறான ஊதியம் உள்ளது. இதனை மாற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சுகாதார பணியாளர் 3000 நபர்களில் 841  பேருக்கு மட்டுமே ஊதிய உயர்வும் பணி பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

 

மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அனைவருக்கும் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.