சென்னை மண்டல வானிலை மையத்தின் அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக, 14-ந் தேதி வாக்கில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேலும் வலுவடைந்து தெற்கு ஆந்திர, வடதமிழகம் மற்றும் புதுவைப் கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக, வருகின்ற அக்டோபர் 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடம் என்றும் அக்டோபர் 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை தெரிவித்தது.


விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியில் அழகன் குப்பம், வசவன் குப்பம், கைப்பாணிக் குப்பம், எக்கியர் குப்பம், புதுக்குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், முதலியார் குப்பம் உள்ளிட்ட 19 மீனவர் குப்பங்கள் உள்ளன.  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மரக்காணம் கடற்கரைக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் நீர் உட்புகுந்து படகுகளை இழுத்து செல்வதை தவிர்க்க மேட்டுப் பகுதியில் நிறுத்தியுள்ளனர்.


புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை


புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழக புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் காற்று அதிகமாக வீசும் பகுதிகளுக்கு செல்லாமல் மிகவும் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுமாறும் மேலும் அக்டோபர் 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வப்பொழுதுவெளியிடப்படும் வானிலை முன் எச்சரிக்கை செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.