விழுப்புரம் : இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்தபோதிலும், வைலாமூர் கிராமத்திற்கு இதுநாள் வரையிலும் பேருந்து வசதி இல்லை என வேதனையில் இருக்கும் கிராம மக்கள்.
பேருந்து போக்குவரத்தே இல்லாத கிராமம்
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பேருந்து போக்குவரத்தே இல்லாத கிராமம் உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? ஆம். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என சொல்வார்கள். அந்த வகையில் பேருந்து போக்குவரத்தே இல்லாத கிராமம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வைலாமூர் கிராமம். விழுப்புரம்- திருக்கோவிலூர் பிரதான சாலையில் காணையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்தபோதிலும், இக்கிராமத்திற்கு இதுநாள் வரையிலும் பேருந்து வசதியே இல்லை. தேர்தலுக்கு தேர்தல் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் ஆட்சியாளர்கள் யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாணவ- மாணவிகள் அவதி
இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. ஆனால் இங்குள்ள மாணவ- மாணவிகள், மேல்நிலைக்கல்வியை பெற காணை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு மாணவ- மாணவிகள், தங்கள் வீட்டில் இருந்து புத்தகப்பைகளை சுமந்தபடி வெகுதூரம் கால்கடுக்க நடந்தே செல்ல வேண்டியுள்ளது. சில மாணவ- மாணவிகள், விழுப்புரம் நகரில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களும் தங்கள் வீட்டில் இருந்து காணை மெயின் ரோடு வரை நடந்தே வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து ஏறி, விழுப்புரம் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் பல சமயங்களில் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மாணவ- மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த சிரமத்தைத்தான் அனுபவித்து வருகின்றனர். அதுபோல் அத்தியாவசிய தேவைக்காக அக்கிராம மக்கள், கால்கடுக்க நடந்தே காணைக்கு வந்து செல்கின்றனர். விழுப்புரம் பகுதியில் கூலி வேலை பார்ப்பவர்களும், வைலாமூரில் இருந்து நடந்தே காணை மெயின் ரோட்டுக்கு வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேதனையில் மக்கள்
எனவே வைலாமூர்- காணை இடையே அரசு பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டுமென அக்கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேருந்து வசதி கேட்டு, அவர்கள் செல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை, போகாத நாட்கள் இல்லை. அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் கால்கடுக்க நடந்ததுதான் மிச்சமே தவிர எந்தவொரு அதிகாரிகளும், வைலாமூர் கிராமத்திற்கு பேருந்து இயக்க செவிசாய்க்கவில்லை. இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைத்தனர். ஆனால் அரசு பேருந்து சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.
நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் மலைவாழ் கிராமங்களில்தான் பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நகரப்பகுதியை ஒட்டியுள்ள அதாவது விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வ.பாளையம் பகுதியில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவிலே இருக்கக்கூடிய வைலாமூர் கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து இல்லாமல் இருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், வைலாமூர் சாலை குறுகலாக உள்ளதாகவும், பேருந்துகள் வந்துசெல்ல மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை காரணம் காட்டி அக்கிராமத்திற்கு பேருந்து இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ஆனால் அதேநேரத்தில் இங்குள்ள விவசாய விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்ல லாரிகள், டிராக்டர்கள் வந்து செல்கின்றன. சில தனியார் பள்ளிகளின் பேருந்துகளும், வைலாமூர் கிராமத்திற்குள் வந்து மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு செல்கின்றன. அந்த பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களை பார்க்கும் போது அரசு பள்ளிகளுக்கு படிக்க கால்கடுக்க நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், தங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கினால் நாமும் அதில் பயணம் செய்து எந்தவித சிரமமும் இன்றி விரைவாக பள்ளிக்கு சென்று வரலாமே என்று அவர்கள் ஏங்காத நாட்கள் இல்லை.
இந்த வாகனங்களின் போக்குவரத்து நடைபெறுகிற நிலையில் அரசு பேருந்து போக்குவரத்தை மட்டும் தொடங்காமல் இருப்பது ஏனோ என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இங்குள்ள மக்களின் நலன் கருதியும், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் வைலாமூர் கிராமத்திற்கு உடனடியாக பேருந்து வசதியை ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.