அமைச்சர் நமச்சிவாயத்துக்கு டெங்கு பாதிப்பு ... அதிகரிக்கும் டெங்கு, சிக்குன்குனியா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Continues below advertisement

புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மக்களுக்கு அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. அதில் பெரும் பாலானவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Continues below advertisement

இது தவிர சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெங்கு குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளரும் சுகாதாரத்துறை இயக்குனருமான (பொறுப்பு) டாக்டர் செவ்வேள் கூறியதாவது:

புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது கண்டறியப்படுகிறது. 100 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டால் அவர்களில் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத் தான் உள்ளது. அடுத்து வரும் நாட்களில் மழை அதிகமாக இருக்குகும் என்பதால் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று உயரும். டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு மருந்து தெளிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சுகாதாரத்துறையின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டெங்கு

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களாக உடல் அசதியுடன் சளி, காய்ச்சலால் கடும் அவதிக்குள்ளானார். இதற்காக மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது டாக்டர்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு ஆலோசனை தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

அதன்படி அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்ததில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியியில் கடந்த சில நாட்களாக டெங்கு, சிக்குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement