விழுப்புரம்: பிரதமர் மோடியை எதிர்த்து  வாரணாசி தொகுதியில் போட்டியிட பனராஸ் ரயிலில் சென்ற விவசாயிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய மறுக்கப்பட்டதால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயிலை இயக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என  கூறி விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை ஈடுபட்டு  வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து மோடியை எதிர்த்து போட்டியிட  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சார்ந்த அய்யாக்கண்ணு தலைமையில் 39 விவசாயிகள் பனாரஸ் செல்லக்கூடிய காசி தமிழ்ச் சங்கம் ரயிலில் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

 

ரயிலில் புறப்பட்டவர்களுக்கு திடீரென இருக்கைகள் இல்லை என்றும், காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும் ரயில்வே அலுவலர்கள் கூறினர். இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ரயில்வே நிர்வாகத்தினர் விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற ரயில் நிலையங்களில் கிடைக்கும் காலி இருக்கைகளை ஒதுக்கீடு செய்வதாக ரயில்வே அலுவலர்கள் உறுதியளித்தனர்.

 

இந்நிலையில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது டிக்கெட் ஒதுக்காததால் அய்யாக்கண்ணு தலைமையில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் 12:05 வந்த ரயிலை இருக்கைகள் ஒதுக்க கோரி  50 நிமிடம் இயக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரயில்வே அலுவலர்களும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரக்கோணம் சென்றவுடன் இருக்கைகள் ஒதுக்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.