விழுப்புரம்: வளவனூர் அருகேயுள்ள சாலையாம்பாளையத்தில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான ரூ.15.30 கோடி நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உதவி ஆணையர் சக்திவேல் அறிவிப்பு பலகை வைத்தனர்.
தமிழக இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கவும், வாடகை வசூலிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள குமாரகுப்பத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமாக சாலையம்பாளையம் கிராமத்தில் 7.66 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தேசிங்கு, ராமச்சந்திரன், ராமு, மகாராணி, அங்கப்பன், ஆகிய 5 பேர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிர்சாகுபடி செய்து வந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பினை மீட்க இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலமுறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கயுள்ளனர். இருப்பினும் அவர்கள் தானாக ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ளவில்லை என்பதால் இன்றைய தினம் விழுப்புரம் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி, உதவி ஆணையர் சக்திவேல் தலைமையில் கோயிலுக்கு சொந்தமான 15 கோடிமதிப்பிலான 7.66 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடங்களில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இந்தசமய அறநிலையத்துறை சார்பில் இடம் மீட்கபட்டதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை பற்றிய தகவல்கள்!
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, பழனி என, 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.
பணிகள்
இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் வாடகை நிர்ணயம் செய்தல் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகம் முதலியன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை. இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தல்
திருக்கோயில் நிலங்கள் சமத்துவபுரம் அமைக்க, பேருந்து நிலையம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக என்று பலவிதங்களில் கையகப்படுத்தப்படுகின்றது.
கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும், 22600 கட்டடங்களிலும், 33665 மனைகளும் உள்ளன. இந்த நிலங்கள், கட்டடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையைச் செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.
33665 மனைகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவில் இடத்தில் நீண்டகாலமான குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய முயற்சி செய்து வருகிறது. விரைவில் பட்டா வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தார்.