விழுப்புரம் : அனிச்சம்பாளையத்தில், ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடியில், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், முதலமைச்சர் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் வகையிலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலும், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மீனவ மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், நவீன மீன் அங்காடிகள் அமைத்துக்கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட, அனிச்சம்பாளையத்தில், ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மீன் அங்காடி கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இவ்வங்காடியில், மீன் கழிவுகளை சுகாதாரமான முறையில் தூய்மைப்படுத்துவதற்கு மீன் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எவருக்கும் சிரமம் ஏற்படாத வகையில் அனைத்து கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு நவீன மீன் விற்பனை அங்காடியில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நவீன மீன் விற்பனை அங்காடி மையத்தில் மீன்கள் மொத்த விற்பனைக்கு தனியாக ஒரு பகுதியும், சில்லறை விற்பனைக்கு தனியாக ஒரு பகுதியும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியினை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்வதற்கு மீன் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கும் தேவைப்படுகிறது. மீன் அங்காடியின் வாயிலாக மீன் விற்பனையாளர்கள் மட்டும் பயன்படுவது மட்டுமல்லாமல், பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி பயன்பெற்றிட முடியும். ஆகவே, இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.