விழுப்புரம்: மரக்காணம் அருகே குடிபோதையில் பாமக பிரமுகரின் கார் மோதியதில் விசிக நிர்வாகிகள் 2 பேர் மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மரக்காணத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர்கள் அருண் வயது (27) கீர்த்தி வயது (27). இவர்கள் விசிக நிர்வாகிகள். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் வயது (20) அனீஸ் வயது (18) இந்த இரண்டு பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இந்நிலையில் இந்த நான்கு பேரும் மாலை நடுக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர்களான மாரிமுத்து வயது (43) மற்றும் அவரது நண்பர்களான ஐயப்பன் வயது (44) சுகுமார் வயது (40) ஆகியோர் குடிபோதையில் ஒரு காரில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற காரை ஐயப்பன் ஓட்டி சென்றுள்ளார். குடிபோதையில் சென்ற இவர்கள் நடந்து சென்ற நான்கு பேர் மீது கார் மோதி உள்ளது.


இதில் அந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் அருணின் கால்கள் முறிந்து உள்ளது. இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள்  படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக சென்று உள்ளது. இந்த காரை போலீசார் வழியில் மரித்து நிறுத்தி உள்ளனர். அப்போது காரில் இருந்து மாரிமுத்து சுகுமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்து விட்டனர்.


இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காரை ஓட்டிச் சென்ற ஐயப்பனை மரக்காண காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசிக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மரக்காணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தப்பி ஓடிய பாமக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இச்சம்பவத்தால் மரக்காணம் நடு குப்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.