மயிலம் அருகேயுள்ள அவ்வையார் குப்பத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தில் படிக்கட்டு அமைப்பதற்காக குளத்தில் நிரம்பிய நீரை டிராக்டர் மூலம் வெளியேற்றி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  அவ்வையார் குப்பத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை தூர் வாரும் பணியினை மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தொகுதி நிதியின் கீழ் அவரது ஆதரவாளரான சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கொண்டார். அதன் பின்னர் பருவமழையின் காரணமாக குளத்தில் படிக்கட்டு கட்டும்பணி முடிக்க முடியாமல் போனது. தற்போது பருவமழையின் தாக்கம் குறைந்ததினால் குளம் முழுமையாக நிரம்பியிருந்ததை இரண்டு டிராக்டர் மூலம் நீரை வெளியேற்றும் பணியினை டெண்டர் எடுத்த சண்முகம் மேற்கொண்டார்.


பல ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த கிராமமக்கள் திடீரென குளத்தில் இருந்து நீரை வெளியேற்றியதை கண்டு அதிர்ச்சி அடைந்து நீரை வெளியேற்ற வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அதனை கண்டு கொள்ளாமல் டெண்டர் எடுத்தவர் நீரை நேற்று முதல் இரண்டாவது நாளாக வெளியேற்றியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகனிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக குளத்திலிருந்து நீரை வெளியேற்றும் பணியினை நிறுத்த உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவின் நீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது. அவ்வையார் குப்பம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பிறந்த கிராமம் என்பது குறிப்பிடதக்கது.