பண்ருட்டி அருகே தேங்காய் பறிக்கச் சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தக் கோரி மாணவரின் உறவினர்கள் இரண்டாவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் அரசு (17). பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐயில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் பிரிவில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஐடிஐயில் பணிபுரியும் ஆசிரியர் பிரபாகரன் என்பவர் ஒறையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டின் தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக மாணவர்கள் அரசு (17), ஆதி (16) ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஆதி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கீழே தள்ளிய பொழுது குறுக்கே சென்ற மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் நின்றிருந்த மாணவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற புதுப்பேட்டை போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இறந்தவரின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியர் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி இன்று மாணவரின் உறவினர்கள் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐடிஐ நிறுவனம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.