திண்டிவனத்தில் வழக்கறிஞரை காரில் கடத்தி சென்ற கும்பலை கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜகணபதி(32), இவர் திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுராந்தகம் காவல் நிலையத்தில் போலீசார் எனது அண்ணனை பிடித்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வழக்கறிஞர் வீட்டில் இருந்து பைக்கில் திண்டிவனம் வந்து, பைக்கை தனியார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அந்த நபருடன் காரில் சென்றுள்ளார். காரில் செல்லும் போது மேலும் காரில் இருந்த மூன்று நபர்கள் வழக்கறிஞரிடம் முன்னுக்குப் பின் முரணாக பேசியபடி வந்துள்ளனர். இதனால் வழக்கறிஞருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓங்கூர் சுங்க சாவடியில் மற்றொரு நபர் காரில் ஏறி உள்ளார். சுதாரித்துக் கொண்ட வழக்கறிஞர் அந்த நபரை உள்ளே சென்று உட்காரும்படி கூறியுள்ளார். அப்போது அந்த நபர் வழக்கறிஞரின் இரு கைகளைப் பிடித்து காரின் உள்ளே தள்ளி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த மூன்று நபர்களும் வழக்கறிஞரை கை, கால்களை பிடித்து காரில் கடத்தி செல்ல முயன்றனர். சுதாரித்துக் கொண்ட வழக்கறிஞர் அவர்களிடமிருந்து தப்பித்து சுங்க சாவடியில் பணிபுரியும் ஊழியர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர்கள் வழக்கறிஞருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் காரில் 9ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என வழக்கறிஞர்கள் திண்டிவனம் நீதிமன்றம் எதிரே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்