விழுப்புரம் மாவட்டத்தில்  அதிகாலை 3 மணியளவில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இடைவிடாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது வருகிறது. மேலும் பல கிராமங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றன. அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.




பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் பேருந்து  நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல் அதன் நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றன. இதே போல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்க பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், வளவனூர், காணை, நன்னாடு, தோகைப்பாடி, சிந்தாமணி, அய்யூர் அகரம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் செஞ்சி, மணம்பூண்டி, முகையூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



கள்ளக்குறிச்சியில் காலை முதல் லேசான தூரலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கன மழையாக பொழிந்தது. இதனால் கணக்கப்பிள்ளை தெரு, கவரை தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீருடன் கழிவு நீரும் இரண்டற கலந்து குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் சேலம் மெயின் ரோடு, காந்திரோடு ஆகிய சாலைகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் குடியிருப்பு வாசிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மழை கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்தது. 




அதே போல் மூங்கில்துறைப்பட்டில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாற்றத்துடன் சிரமப்பட்டு சென்னர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு, கெடிலம் கருவேப்பிலை பாளையம், சிறுத்தனூர், பாதுர், வண்டிப்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சீரான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.