விழுப்புரம்: விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரிங் ரோடு அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை‌ வைத்துள்ளனர்.

ரிங் ரோடு 

ரிங் ரோடு என்பது ஒரு நகரத்தின் புறநகர் பகுதிகளை இணைக்கும் ஒரு பெரிய வட்டமான சாலை ஆகும். இது நகர மையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, புறநகர் பகுதிகளுக்கு இடையே எளிதாக பயணிக்க உதவுகிறது.

விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் 

விழுப்புரம் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், கடந்த 1993ம் ஆண்டு புதிதாக உருவாகி, இன்னமும், மாவட்ட தலைநகரமான விழுப்புரம் மாநகரம், போதிய அளவு விரிவாக்கம் பெறவில்லை. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாகச் செல்லும் கிழக்கு பாண்டி ரோடு, தினந்தோறும் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இச்சாலையில் நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து மாதா கோவில் பஸ் நிறுத்தம் வரை சாலை விரிவாகக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த சாலை மட்டுமின்றி, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளான நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு, புதிய பஸ் நிலையம் எதிரில், திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலைகளில் நெரிசல் சொல்லி மாளாது. இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும், மகாராஜபுரத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரையில் இச்சாலையில் அரசியல் கட்சிகள் பேரணி, சட்டம், ஒழுங்கு பிரச்னை, முக்கிய பிரமுகர்கள் வருகை, பண்டிகை காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் என இதில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் 5 கிலோமீட்டர் துாரத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேலாகின்றது.

நகரின் மேற்கு புறம் புதிய பேருந்து நிலையமும், கிழக்கு புறம் மார்க்கெட், மேல்நிலைப் பள்ளிகள், பழைய பஸ் நிலையம், தியேட்டர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ரிங் ரோடு அத்தியாவசியம் 

இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், விழுப்புரம் நகரில் ரிங் ரோடு அமைப்பது அவசியமானதாக உள்ளது. அதாவது, விழுப்புரம் நகரின் வடக்கு புறம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் இருந்து காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி வரை இணைப்பு சாலை அமைக்க வேண்டும். மேலும், விழுப்புரம் நகரின் தெற்கு பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் பக்கத்தில் உள்ள சாலையில் இருந்து மருதுார் ஏரி வழியாக பானாம்பட்டு சாலையை இணைக்க வேண்டும்.

விழுப்புரம் நகராட்சி எதிர்வரும் காலங்களில் மாநகராட்சியாக வாய்ப்பு உள்ளது. இதனால், இப்போதே விழுப்புரம் நகரில் ரிங் ரோடு அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். கடந்த 2021ம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் விழுப்புரம் நான்குமுனை சிக்னல் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விழுப்புரத்தில் சுற்றுவட்ட பாதை ஏற்படுத்தவில்லை என அப்போதைய ஆளும்கட்சியான அதிமுகவை விமர்சித்தார்.

ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்து தற்போது ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆனாலும், விழுப்புரத்தில் ரிங் ரோடு திட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே, விழுப்புரத்தில் ரிங் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.