விழுப்புரம்: பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காத மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இப்பிரச்சனையில் தீர்வு காணும் வரை கோயிலை திறந்து பூஜை செய்வதற்கு ஒருவரை மட்டும் அனுமதிக்க கோரி இந்து மக்கள் கட்சியினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரௌபதியம்மன் ஆலயத்தில் பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காமல் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்களை உள்ளே அனுமதிப்பது தொடர்பாக 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டபடாத நிலையில் கடந்த 07.06.2023 கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. அன்று முதல் கிராமம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக இருதரபினருடமும் விளக்கத்தை வருவாய் வட்டாட்சியர் பெற்றுள்ள நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கோவிலை மாவட்ட நிர்வாகத்தினர் சீல் வைத்திருக்க கூடாது என்றும் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் பூஜைகள் தடைபட்டுள்ளதால், பூஜை செய்வதற்காவது கோவில் பூசாரியை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலானோர் மனு அளித்தனர்.
கோவில் வழிபாடு நடத்த அனுமதி அளித்த மனுவில் குறிபிட்டுள்ளதாவது...
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா திரௌபதை அம்மன் ஆலயம் உள்ளது. இதுவரை கோவில் வழிபாடுகள் தடைப்பட்டது இல்லை. இந்த ஆண்டு 2023 வருடம் கடந்த சில நாட்களாக 07.06.2023 கோவில் வழிபாடுகள் நடத்தாமல் பிரச்சனைகள் உள்ளது என காரணம் காட்டி அரசு வருவாய் துறை அதிகாரிகள் மேற்படி கோவிலில் வழிபாடுகள் கூட்ட நடத்த அனுமதிக்காமல் சீல்வைத்து அடைத்துவிட்டனர். இந்து விரோதிகள் வேண்டும் என்றே வன்முறையை தூண்டும் வகையில் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி கோவில் தனிநபர்களுக்கு சொந்தமானது, இதுவரை ஒரு நாள் கூட வழிபாடுகள் நடக்கும் வழக்கம் தடைப்பட்டது இல்லை. இந்து கலாச்சார வழக்கப்படி கோவில் வழிபாடுகள் நடத்தவில்லை என்றால் தெய்வ குற்றத்திற்கு ஆளாக நேரிடும் எனவே மாவட்ட நிர்வாகம் காவல் துறை பாதுகாப்போடு மக்கள் வழிபட கோவிலை திறக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எதிர்பாராத காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டால் பேசிதீர்க்க வேண்டுமே தவிர மாவட்ட நிர்வாகம் மக்கள் விரோதமாக செயல்படக்கூடாது எங்களின் கருத்து ஆகும். மக்களை நல்லமுறையில் வழிநடத்தவே அரசு மக்கள் நலனே மக்கள் கலாச்சாரமே முக்கியம் என குறிப்பிட்டுள்ளனர்.