விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.


ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ந்து சென்றது. இதனால் விழுப்புரத்தில்  அதிகனமழையானது கொட்டித் தீர்த்தது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திருவண்ணாமலை நோக்கி சென்றது.


இந்நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத வேக காற்று மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதனால்  வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும், வெள்ளநீரால் விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தானது பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.


குறிப்பாக விழுப்புரம், மைலம், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் மிகத் தீவிர மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளக் காடாக மாறின. இதனையடுத்து, அரசின் சார்பில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் சரிசெய்து வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செமீட்டர் அளவுக்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது. விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.


விழுப்புரம் நகரத்தை பொறுத்த வரை எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. விழுப்புரம் நகரில் உள்ள கெளதம் நகர், ஸ்ரீராம் நகர், சுபஸ்ரீ நகர், சுதாகர் நகர், சேலைமஹால் பின்புறம் உள்ள விஐபி கார்டன், மகாராஜபுரம் தாமரைக்குளம்,ஆட்சியர் அலுவலகம்,  ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சுதாகர் நகர், ஆசாகுளம், சுமையா கார்டன், ஹைவேஸ் நகர், ராஜேஸ்வரி நகர், சரஸ்வதி அவென்யூ, பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருச்சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதோடு, வாகனங்களும் மூழ்கியதால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே குடிநீரோ, அத்திவாசிய தேவைக்கான தண்ணீரோ கிடைக்காமல் மக்களுக்கு கடும் வேதனையில் உள்ளனர்.


விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்துள்ளது. 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள், 8 மாநில பேரிடர் குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளது. மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 631 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்விநியோகத்தை சீரமைக்க 10ஆயிரம் மின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 மாவட்டங்களில் 7826 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், தி.மலை, கடலூர் மாவட்டங்களில் 637 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் 147 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் 3.18 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.