விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் 


விழுப்புரம்: ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து அசுத்தத்தின் அடையாளமாகவும், சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாக மாறியுள்ள விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை கண்டுக்கொள்ளாத நகராட்சி மற்றும் காவல்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக உள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். தென்மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் பேருந்து நிலையத்தை கண்டுகாணாமல் இருக்கிறது. இதனால் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து அசுத்தத்தின் அடையாளமாகவும், சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாகவும் திகழ்கிறது. 




அசுத்தமான நிலையில் பேருந்து நிலையம் 


இப்பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்து கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்திற்கு வருவோர் மூக்கை பிடித்தவாறே கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்குள்ள கடைகள் அனைத்து பயணிகள் நடந்து செல்லும் பாதசாலை, பயணிகள் காத்திருக்கும் இடம் என அனைத்தும் ஆக்கிரமித்து தேநீர் கடைகள், பழ கடைகள் என பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் அங்கு உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயங்கும் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாத அளவிற்கு குப்பைகள், தேவையற்ற பொருட்களை சேமிக்கும் இடமாக மாற்றியுள்ளனர் கடைக்காரர்கள். 




குற்ற சம்பவங்கள்


மேலும் பேருந்து நிலையத்தில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட  பல்வேறு குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழுப்புரத்தை கடந்து செல்லும் பயணிகள் கடும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பற்ற நிலையால் பெண்கள் ஒரு வித இருக்கமான மன நிலையில் விழுப்புரம் பேருந்து நிலையத்தை கடந்து வருவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரத்தில் வரும் பயணிகள் பெண்களிடம் வழிப்பறி மற்றும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சுகாதாரத்தில் நகராட்சி நிர்வாகமும், பாதுகாப்பில் காவல்துறையும் மிக அலட்சிய போக்குடன் நடந்துக்கொள்வது பொதுமக்களிடம் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .




உயிர்பலி வாங்கிய வாகனகள் 


வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையால் பறிமுதல் செயல்படும் விபத்துக்குள்ளான பேருந்துகள், கார்கள் ஆகியவைகளை பேருந்து நிலைய வாயிலில் நிற்க வைத்துள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த அச்சமடைகின்றனர். உயிர்களை பலி வாங்கிய வாகனங்களை பார்க்கும் போது அச்சமாக உள்ளதாகவும், பொது இடத்தில் அவற்றை நிறுத்தி வைத்திருப்பது தவறான செயலாகவும்,  மணல் லாரிகள், டாடா ஏசி,  சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். நாள் தோறும் இரவு, பகலாக ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த மிகப்பெரிய பேருந்து நிலையம் மக்களுக்கானதாக இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.