விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தவுள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆனையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விழுப்புரம் சேமிப்பு கிடங்கிலிருந்து மின்னனு வாக்குபதிவு இயந்திரம் அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பழனி பார்வையிட்டு விளவங்கோடு பகுதிக்கு இன்று அனுப்பி வைத்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், சென்னை பொது தேர்தல் துறை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 550 (EVM (BUS+ CUS) & VVPAT) மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை வெளியில் எடுத்து கன்னியாகுமரி மாவட்ட 233. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தலா 550 (EVM (BUS+ CUs) & VVPAT) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம், 233.விலவன்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.தமிழரசன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் திரு.வசந்த கிருஷ்ணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.கணேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.