விழுப்புரம்: விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 5 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதில் விதிமுறையை பின்பற்றாமல் கோட்டாட்சியர் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிட மாறுதல்
விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் விஏஓ ஜெயந்தி பஞ்சாதேவிக்கும், வானூர் விஏஓ விமலா நவமால்மருதூருக்கும், செங்காட்டிலிருந்து விஏஓ பெருமாள் வடவாம்பலத்திற்கு வடம்வாம்பலம் மாலதி ஆனாங்கூருக்கும் கல்பட்டு பார்த்தசாரதி பள்ளி நேலியனூருக்கு ஆகிய 5 கிராம நிரவாக அலுவலர்கள் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாறுதலில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா ஷாகுல் ஹமீதை கண்டித்து விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் கோட்டாசியர் பேச்சுவார்த்தை
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் கோட்டாசியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தொடர் தர்ணா போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் காரணமாக பல்வேறு கிராமங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு செல்லவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபடுமென வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் காரணமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.