விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்த நிலையில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
விசாரணை கைதி மரணம்
விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த இளைஞர் அற்புதராஜ் (30) என்பவர் மீது அடிதடி வழக்கு சம்மந்தமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் தலைமறைவாக இருந்து வந்த அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கடந்த 4 மாதங்களாக தேடி வந்ததுள்ளனர். இந்நிலையில் ஜிஆர்பி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அற்புதராஜை நேற்று விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசாருக்கு டிம்மிக்கி கொடுத்துவிட்டு 4 மாதங்களாக தலைமறைவாக இருந்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் பிடிப்பட்ட அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறையில் நேற்று மாலை போலீசார் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அற்புதராஜிற்கு திடீரென உடல்நிலைப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறை போலீசார் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட சிறையில் இருந்து சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அற்புதராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அற்புதராஜின் உறவினர்கள், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வந்து அற்புதராஜின் உடலை கண்டு கதறி அழுதனர். போலீசார் தாக்கிய காரணத்தாலேயே உடல் நிலை பாதிக்கப்பட்டு அற்புதராஜ் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறுகையில், விசாரணை கைதியின் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே முழு விவரம் வெளிவரும் என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.