விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேலுவை தற்காலிக பணியிடை நீக்கம்


விழுப்புரம் மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள் வழங்காமலும், அடையாள அட்டை வழங்கும் முகாம்களை சரிவர நடத்தாமலும் தங்கவேல், மெத்தன போக்குடன் இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன.


இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பணியாற்றி வரும் தங்கவேல் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் டாக்டர் பழனிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியிருந்தார்.


நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் இருந்த அலுவலர் தங்கவேலு


மாவட்ட ஆட்சியர் பழனி மேற்கண்ட விசாரணையில் புகார்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்தது. அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்கு கடிதம் மூலம் அனுப்பினார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உரிய அனுமதி இல்லாமல் தலைமையிடமான விழுப்புரத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் சரியாக பணியாற்றாமல் அசால்ட்டாக இருக்கும் அதிகாரிகள் மத்தியில் புளியைகரைதுள்ளது.


தற்காலிக பணியிடை நீக்கம்


தற்காலிக நீக்கம் அல்லது இடை நீக்கம் (Suspension) என்பது பணியிட விசாரணை நடைபெறுவதற்காக அல்லது நிறுவனத்தின் கொள்கை மீறலுக்கான ஒழுங்கு நடவடிக்கையாக, பணியாளருக்கு ஊதியத்துடன் அல்லது ஊதியமல்லாது வழங்கப்படும் தற்காலிக நீக்கக் காலத்தினைக் குறிப்பதாகும். பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படும் காலத்தினையும் இது குறிக்கிறது. ஒரு நிறுவனத்தின் கொள்கையை மீறியதற்காக பணியிடத்தில் இடைநீக்கம் செய்யப்படுவது ஒரு பொதுவான நடைமுறையாகும். ஒரு வணிக மேலாளர் அல்லது மேற்பார்வையாளர் ஒரு பணியாளரின் செயலை, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ வரம்பு மீறியதாகக் கருதும்போது பணி தற்காலிக நீக்கங்கள் ஏற்படும். இந்த நீக்கமானது நிறுவன நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தாது.