விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பச்சாவடிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பச்சாவடிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின்கீழ், வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பார்வையாளர் பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவிற்காக பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் மளிகைப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியினை ஆய்வு செய்து, சுத்தம் செய்த நாள் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின்கீழ், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, அரசால் வழங்கப்பட்டுள்ள அட்டவணையின்படி காலை உணவினை சமைத்து வழங்க வேண்டும் என சமையலருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், குழந்தைகளிடம் நாள்தோறும் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா எனவும், உணவு சுவையாக உள்ளதா எனவும் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்” திட்டத்தின்கீழ், கற்பிக்கப்பட்ட பாடல் மற்றும் கதைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மாணவ, மாணவியர்கள் தாங்கள் கற்ற பாடங்களை ஆர்வத்துடன் பதில் அளித்தனர். இப்பள்ளியில், தலைமையாசிரியராக பணிபுரியும் அங்கயற்கன்னி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் காலை 9.15 மணி வரை பள்ளிக்கு வருகை புரியாத காரணத்தினால், இரு ஆசிரியர்களையும் பணியிடமாற்றம் செய்திட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.