விழுப்புரம்: செஞ்சி அருகே கண்டறியப்பட்ட 1,200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டெடுப்பு

விழுப்புரம்: செஞ்சி அருகே கண்டறியப்பட்ட 1,200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டெடுப்பு

Continues below advertisement

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து சேத்பட் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது , சேத்பட்டை அடுத்த பருதிபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக அவ்வூரை சேர்ந்த கார்த்தி தந்த தகவலின் பேரில் இருவரும் கள ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இருந்து சேத்பட்  செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பருதிபுரம் கிராமத்தின் வயல்வெளி அருகே பலகை கல்லினால் ஆன சிற்பம் காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள அச்சிற்பம் பார்ப்பதற்கு கொற்றவை சிற்பம் போல் தெரிந்தது.

Continues below advertisement

மேலும் இது குறித்து ராஜ் பன்னீர்செல்வம் கூறுகையில், இச்சிற்பம் தலைப்பாரம் பார்பதற்கு போர் வீரர்கள் அணியும் கவசம் போல கரண்ட மகுடத்துடன் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளுடன்,இரு செவிகளிலும் பனையோலை குண்டலும் அணிந்து காட்சி தருகிறது. அதுமட்டுமில்லாமல், கழுத்தில் கூர்மையான ஆரம் போன்ற அணிகலன்களையும், அனைத்து கரங்களிலும் தோள்வளையம் மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறது. 


மேலும்,நான்கு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தையும்,கீழ் வலது கரம் மணியும் ஏந்தி நிற்க , மேல் இடது கரத்தில் சங்கும் , கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது இச்சிற்பத்தின் தனிச்சிறப்பாகும். கொற்றவையின் இடையாடை பெரிய முடிச்சுகளுடன், இடையருகே இடது புறம் கலைமானும் , காலின் இருபக்கமும் வீரர்கள் உள்ளது போலும், எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.


இக்கொற்றவையின் சிற்பமைதி, ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து  இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாக கருதலாம். மேலும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவைகள் பெரும்பாலும் அஷ்ட புஜங்களுடன் வடிக்கப்பட்டுள்ள நிலையில் , இச்சிற்பம் மட்டும் கையில் மணியுடன் சதுர் புஜமாகக் காட்சி தருவது தனித்துவமான ஒன்றாகும். இந்த சிற்பம் சுமார் 1200 வருடம் பழமையான கொற்றவையாகும். இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அக்கிராம மக்கள் போற்றி வணங்குகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement