விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியமர்த்திய தன்னார்வலர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கவில்லை என பாதித்தோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சமூக வளம் அமைப்பில் பணிபுரிந்த நபர்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த 2022– 23ம் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி பயில தமிழக முதல்வர் ஸ்டாலின் “நான் முதல்வன்” திட்டத்தை கொண்டு வந்தார். இதில் ஒரு பகுதியாக உயர்கல்வி வழிக்காட்டல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் ஒவ்வொரு குழு அமைத்தனர். அந்த குழுவில், சமூக வளம் அமைப்பு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நபர் என மாற்று ஊடக மையம் மூலம் 3,200 பேர் தன்னார்வலராக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள், கடந்த மே 9ம் தேதி முதல் பணியில் சேர்ந்தனர். இதில் ஒரு நபருக்கு மாதம் தலா ரூ.10,000 ஊதியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு பின், ரூ.7,500 என கூறினர். தொடர்ந்து 4 மாத காலத்தில் நான் முதல்வன் திட்ட பணி முடிவதாக தெரிவித்தனர். நாங்கள் ஊதியம் கேட்ட பின், முதல் தவணையாக போக்குவரத்து செலவுக்காக ரூ. ஆயிரமும், 2வது தவணையாக ரூ.4,000 உட்பட மொத்தம் ரூ. 5 ஆயிரம் வழங்கினர். மீதமுள்ள பணம் தற்போது வரை வழங்கவில்லை. நாங்கள் அமைப்பிடம் சென்று கேட்டால், கல்வித்துறை மீதும், மாற்று ஊடக மையத்தை காட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.