புதுச்சேரி: மகளிர் ஊர்க்காவல் படையினருக்கு 6 மாத கால மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்குவதற்கான அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். நேற்று ஆளுநர் தமிழிசை சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.


ஆளுநர் டாக்டர் தமிழிசை, கீழ்காணும் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



  1. புதுச்சேரி அரசு, காவல்துறையில் பணிபுரியும் மகளிர் காவலர்களுக்கு(Women Police Constables) வழங்கப்படுவதைப் போல மகளிர் ஊர்க்காவல் படையினருக்கு (Women Home Guards) ஆறு மாத கால மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்குவதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

  2. கடந்த பட்ஜெட் உரை 2021-22 மற்றும் 2023- 24 இல் மாண்புமிகு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததை போல பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் இடுபொருள் மானியத்திற்கு பதிலாக “பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின்கீழ்“ (Crop Production Technology Scheme) பயிர் சாகுபடி செலவு மானியம் (அ) உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கும் விதமாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.


அதன்படி,



  • இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8,000 வீதம் சொர்ணவாரி மற்றும் சம்பா (அ) சம்பா மற்றும் நவரை ஆகிய இரண்டு பருவகாலங்களுக்கு வழங்கப்படும்.

  • பயிர் வகைகள், எள் சாகுபடி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் உற்பத்தி ஊக்கத்தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 3,000 மற்றும் ரூ. 5000 தொகையுடன் இடுபொருள் மானியமாக ரூ. 2000 வழங்கப்படும்.

  • கடலை சாகுபடிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் உற்பத்தி ஊக்கத்தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,000 தொகையுடன் இடுபொருள் மானியமாக ரூ. 3,000 வழங்கப்படும்.

  • நிலத்தின் ஊட்டச்சத்து மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, இயற்கை வேளாண் இடுபொருட்களான தழை உரம், மண்புழு உரம், ஜிப்சம், போன்றவை பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் அட்டவணை இன விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்படும்.

  • சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் பொது விவசாயிகளுக்கு கிலோ ரூ. 10 மானிய விலையிலும், அட்டவணை இன விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் வழங்கப்படும்.

  • இயற்கை உரங்கள், பூச்சுமருந்துகள், வேப்பம் புண்ணாக்கு ஆகியவை பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் அட்டவணை இன விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும் வழங்கப்படும்