விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம் மற்றும் ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாங்கொளத்தூர்,  ஆவனிப்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கொள்முதல் செய்யப்படும் நெல் அளவு, நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார், இதில் ஆவனிப்பூர் கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-




விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது, ஒவ்வொருநாளும் 1,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம் காணை ஊராட்சில் 15,000 மெட்ரிக் டன் உள்ள திறந்தவெளி நேரடி நெல் சேமிப்பு கிடங்கு நிறுவப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி நேரடி நெல் சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்படுவதற்கு வசதியாக உள்ளது.






மேலும், கடந்த வாரம் செஞ்சி ஒன்றியதுக்குட்பட்ட வளத்தி நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு 1 ரூபாய் பணம் மூட்டை தூக்குபவர்கள் வாங்குவதாக செய்தி வந்ததன் அடிப்படையில் அப்பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து தவறு செய்த பில் கிளர்க் பணியில் இருந்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டு இன்று நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும், இதே போன்று இன்று பாங்கொளத்தூர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது நெல் மூட்டைகள் நிறுத்தம் செய்யும் இயந்திரத்தில் கூடுதலாக ஒரு கிலோ அளவில் எடை காட்டும் வகையில் இயந்திரத்தினை மாற்றி அமைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்புடைய பணியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், வருங்காலங்களில் ஒவ்வொரு வட்டாரத்திற்கு ஒரு லஞ்ச ஒழிப்பு கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது, இந்த கூட்டமைப்பானது திடீர் ஆய்வாக ஒவ்வொரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் சமயத்தில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அலுவராக இருந்தாலும் சரி, மூட்டை தூக்குபவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்ட விதிக்குட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,






மேலும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்களின் பெயர் பதவி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதாகைகளாக வைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது, எனவும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் புகார் பெட்டி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் மக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க அச்சப்படுகின்ற சூழ்நிலையில் இதுபோன்ற புகார் பெட்டியில் புகார் அளிப்பதன் மூலம் அவர்களின் அச்சத்தினை போக்குவது மட்டுமல்லாமல் தவறுகள் சரிசெய்யப்படும் எனவும்,




இதுமட்டுமன்றி 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அலுவலர்களோ, பணியாளர்களோ தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி விவசாயிகளும் தங்கள் சுயநலத்திற்காக பணியாளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் தெரிந்தால் விவசாயிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 34 டன் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஒரு லாரியில் 25 மெட்ரிக் டன் ஏற்றப்படுவதாகவும், இதனால் நெல்முட்டைகள்  தேக்கம் அடைந்துள்ளதாகவும் இதை சரிசெய்வதற்கு ஒரு நேரடி நெல்கொல்முதல் நிலையத்திற்கு ஒரு லாரி  ஏற்பாடு செய்வதாக மாவட்ட  ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.