விழுப்புரம் அருகே மேற்கூரை இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.


விழுப்புரம் மாவட்டம், பெரிய குச்சிபாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் கோலியனூர், தொடர்ந்தனூர், சின்ன குச்சிப்பாளையம், பெரிய குச்சிபாளையம், நன்னாட்டம் பாளையம் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த கருவுரும் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


கருவுற்ற 45வது நாளிலிருந்து ஒன்பதாம் மாதம் வரை இவர்கள் இந்த குச்சிப்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் உள்ள கிராம செவிலியர் மூலமே கண்காணிக்கப்படுகிறார்கள். வாரத்திற்கு சுழற்சி முறையில் சத்து ஊசி போட்டுக் கொள்பவர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள், மாத்திரை வாங்குபவர்கள் என துணை சுகாதார நிலையத்திற்கு தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.


ஆனால் இங்கு உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக அங்கு உள்ள ஒரே அறையின் மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து, சிதலமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த கட்டிடத்தின்  மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால், அங்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ளே சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை நீடித்து வருகிறது. இதற்கு பதிலாக கட்டிடத்தின் வெளியில் மருத்துவம் பார்க்கப்படுகிறது. எனவே, உடனடியாக இந்த துணை சுகாதார நிலையத்தின் கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.