விழுப்புரம் : ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


ஓ.பன்னீர்செல்வம்


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. உரிமை மீட்பு குழு கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட பல்வேறு சட்ட விதிகளை எம்.ஜி.ஆர் வகுத்து சென்றதாகவும், அனைத்து தரப்பு மக்களும் ஜாதி, மத வித்தியாசமின்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதாகவும், அதிமுக 50 ஆண்டுகள் காலமாக கட்டுக்கோப்பாக ராணுவ பலத்தோடு செயல்பட்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார் என குற்றஞ்சாட்டினார்.  சாதாரண தொண்டர்கள்  பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூட சட்ட விதியை எடப்பாடி பழனிச்சாமி மாற்றியுள்ளார்.


பரிதாப நிலையில் எடப்பாடி


அ.தி.மு.க.வில் பொய்யான பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றி, ரவுடிகளை அழைத்து வந்து கூட்டத்தினை முடித்து வைத்தார்கள்.  நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தோல்வியை தழுவி ஒரு இடத்தில் வெற்றி பெற்றதற்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலகி இருக்க வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதால், மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளதாகவும், ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கடையை திறந்து வைத்து காத்திருப்பதாக கூறினார். 


இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்தது மாறிவிட்டது. திமுகவில் கருணாநிதி இருந்தார். இப்போ ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார் படுத்தி கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.