தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. 


திட்டமிட்டபடி நள்ளிரவு முதல்


இதில் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என தொழிற்சங்கங்க நிர்வாகிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இன்னும் கால அவகாசம் வழங்க முடியாது என அந்த வேண்டுகோளை தொழிற்சங்கங்கள் நிராகரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. 


கடும் நடவடிக்கை பாயும்


இதனால் வழக்கம்போல பேருந்துகள் ஓடுமா என மக்கள் அச்சமடைந்தனர். அதேசமயம் தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிமனை முன்பு பிற தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. மேலும் இயக்கப்படும் பேருந்தை தடுக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் போக்குவரத்து கழகம்


 விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில்  திருவண்ணாமலை, வேலூர் ,விழுப்புரம் ,கடலூர் ,காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள்  அடங்கியுள்ளன.   விழுப்புரம் மண் போக்குவரத்துக்கு கழகத்திற்கு 70 பணிமனைகள் அமைந்துள்ளன.  இவற்றில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


போக்குவரத்து நிறுத்தத்தால் பாதிப்பா ?


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பல்வேறு பேருந்து பணிமனைகளில் இருந்து சுமார் 30 சதவீதம் வரையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து  40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  காலை முதலே பெரும்பாலான பேருந்துகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயக்கப்படாமல் உள்ளதாக  தொழிற்சங்கங்கள்   சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  விழுப்புரம் கோட்ட மேலாளர்  தகவல்



 இந்தநிலையில் இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம்  விழுப்புரம்   போக்குவரத்துக் கழகத்தை தொடர்பு கொண்டு   கேட்ட பொழுது, காலை நிலவரப்படி விழுப்புரம் கழகம் சார்பில் சுமார் 1200 பேருந்துகள் இயக்க வேண்டும்.  அவற்றில் 950 க்கும் மேற்பட்ட  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.  இது சுமார் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும்.  அனைத்து பணிமனைகளிலும் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அனைத்து பேருந்துகளும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்   நம்மிடம் தகவல் தெரிவித்தனர்.