செஞ்சி அருகே பேருந்தில் மாணவிகளை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது கும்பலாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் 17 வயது சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டது தொடர்பாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் பர்குணம்(47). இவர் கடந்த நவம்பர் 10ஆம் தேதி செஞ்சியில் இருந்து சிங்கவரம், செவலபுரை, மேல்மலையனூர் வழியாக அவலூர்பேட்டை செல்லும் 6-ஆம்  நம்பர் டவுன் பஸ்ஸில் சென்றுள்ளார். அப்பொழுது மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி- கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பர்குணம் தட்டி கேட்டுள்ளார். அப்பொழுது மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கும் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.


இந்த முன்பகை காரணமாக நேற்று இரவு மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர்  இருசக்கர வாகனத்தில்  கும்பலாக வந்து பர்குணம் (48) என்பவரை தாக்கியுள்ளனர். அப்பொழுது அதை தடுக்க முற்பட்ட அவருடைய மகன் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவனின் தலையில் காயம் அடைந்த நிலையில் அவருக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த வளத்தி போலீசார் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இரவு முழுவதும் செவலபுரை கிராமத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (23) மற்றும் திண்டிவனம் அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவர் கார்த்திக் (19) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த பெண்களை கிண்டல் செய்த கல்லூரி மாணவர்களை தட்டி கேட்டவர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தி கைதான சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.