2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும் விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 01.02.2023 முதல் 28.02.2023 வரை விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 28.02.2023மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். விருது பெற தகுதியுள்ளவர் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்