விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணமலைப்பேட்டை அரசு பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிக்கு வாட்டர் டேங்க் இருக்கைகளை வழங்கி ஒருவருக்கொருவர் அன்பினை பறிமாறிக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பணமலைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டு பள்ளியில் பயின்றபோது நடைபெற்ற சுவாரசியமான பசுமையான நிகழ்வுகளை பேசி பகிர்ந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு அலாரம், வாட்டர் டேங்க், இருக்கைகளை வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து மீண்டும் நண்பர்களை படித்த பள்ளியில் சந்தித்தது மறக்க முடியாத நாளாக அமைந்ததாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ”நாங்கள் அனைவரும் இந்த பள்ளியில் படித்து முடித்துவிட்டு பல்வேறு வேலைகளுக்கு சென்று விட்டோம். இதனால் எங்களால் நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் நேரில் பார்ப்பதும், பேசுவதும் குறைவாகவே இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்காக அவரவர் சிறு தொகையை பங்கிட்டு பொருட்களை வழங்கியுள்ளோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தனர்.