கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்னி பேருந்து விபத்து
நாகர்கோவிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்து இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் என்ற இடம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
20 பேர் காயம்
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தை ஒட்டி வந்த திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் 56 மற்றும் சக ஓட்டுநரான அதே பகுதியை சேர்ந்த குமார் பயணிகள் திருநெல்வேலியை சேர்ந்த பாரதி (26) திருச்செந்தூரை சேர்ந்த மோனிஷ் (25) சென்னையைச் சேர்ந்த இந்துமதி ( வயது 41) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்பு பணி
தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.