விழுப்புரம்: திண்டிவனம் அருகே டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்ற சென்ட்ரிங் தொழிலாளி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவியின் கண்முன்னே கணவரும் கைக்குழந்தையும் தலை நசுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மேல்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (29). சென்ட்ரிங் தொழில் செய்து வரும் இவர், தனது மனைவி தீபலட்சுமி (22) மற்றும் பத்து மாத பெண் குழந்தை தனு ஸ்ரீ ஆகியோர் மேல்சிவிரியில் இருந்து வெள்ளிமேடுபேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக டிப்பர் லாரியில் கருங்கல் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு மேல்சிவிரி நோக்கி வந்து கொண்டிருந்தது.


அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த முத்துக்குமார் பைக்கின் பக்கவாட்டில் டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறிய பைக், லாரியின் வலது புறத்தில் விழுந்ததில் பின்பக்க சக்கரத்தில் முத்துக்குமாரும் அவரது பெண் குழந்தை தனுஷ்ஸ்ரீ மீது பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் இருவர் தலையும் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.


முத்துக்குமாரின் மனைவி தீபலட்சுமிக்கு வலது பக்க கையில் முறிவு ஏற்பட்டது. மனைவியின் கண்ணெதிரே கணவரும் தான் பெற்ற பத்து மாத பெண் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் டிப்பர் லாரியின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். கைமுறிவு ஏற்பட்ட தீபலட்சுமியை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.