விழுப்புரம்: ஆரோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள காசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் தங்கி, விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று காலையில் கணவன், மனைவி 2 பேரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை. மற்ற குழந்தைகளிடம் விசாரித்த போது, 2 வயது குழந்தை கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது அன்னலட்சுமிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரது கணவர் ராஜாவிடம் நடந்ததை கூறினார். கிணற்றில் குதித்து ராஜா குழந்தையை தேடினார். இதில் குழந்தை கிடைக்காததால், ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்தனர். வானூர் தீயணைப்பு அலுவலர் ராஜா தலைமையில் வந்த வீரர்கள், கிணற்றில் குதித்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை குழந்தை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்