விழுப்புரம்: 'டிட்வா' புயல் தாக்கத்தால் மரக்காணத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக 19 மீனவ கிராம மக்கள் 7வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
மரக்காணத்தில் கடல் கொந்தளிப்பு
'டிட்வா' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. டிட்வா' புயல் தமிழகத்தை நெருங்கிய நிலையில் புயலின் வேகம் தற்போது மணிக்கு 10 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கூனிமேடு, பிரம்மதேசம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
கடல் சீற்றம் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் மண்ணரிப்பு
மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் எக்கியார் குப்பம், வசவன்குப்பம், கைப்பணி குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று 7 வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் சீற்றம் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீனவர்கள் தங்கள் படகு மற்றும் வலைகளை சேதமடையாமல் இருக்க மேடான பகுதிகளுக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
டிட்வா புயல் திணறல்:
கனமழை தந்த மோசமான அனுபவங்கள் காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் மற்றும் அப்டேட்களை தாண்டி, தனியார் வல்லுநர்களின் தரவுகளுக்கும் மக்கள் முக்கியத்துவம் தர தொடங்கியுள்ளனர். அந்த வகையில் டெல்டா வெதர்மேன் எனப்படும் ஹேமசந்தர், டிட்வா புயல் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை 4.30 மணி நிலவரப்படி, “நேற்று (29.11.2025) காலை 10:30 மணிக்கு டெல்டா கடல் பகுதியை அடைந்த டிட்வா புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நீடிக்கிறது. தற்போது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே-வடகிழக்கே 60கிமீ தொலைவிலும், சென்னைக்கு 230 கிமீ தெற்கே-தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. வறண்ட காற்று, காற்று முறிவால் புயல் பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் மையப்பகுதியை நோக்கி ஊடுருவிய வறண்ட காற்று மற்றும் காற்று முறிவால் பாதிக்கப்பட்டு டிட்வா புயல் மேக கூட்டங்களை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது” என ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையை நோக்கி பயணம்:
மேலும், “இன்று காலை 8 மணி முதல் புயல் நாகையில் இருந்து விலகி சென்னையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது வறண்ட காற்று அகற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மழை மேகங்கள் உருவாக்கப்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது. ஆனால் அது சென்னைக்கு அருகே வலுப்பெறுகிறதா? அல்லது நெல்லூர் அருகே வலுப்பெறுகிறதா? எப்ன்பதை பொறுத்து இருந்து தான் அறிய வேண்டும். தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பொழியும். அதேசமயம் அதீத கனமழைக்கான வாய்ப்பு விலகியது என்று எடுத்துக்கொள்ளலாம்” என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்