விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள பீமாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து ஆசிரியரை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்த வாலிபர்


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள பீமாபுரம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக பிரமுகரான சந்திரசேகர் என்பவர் மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்து, பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் அமுதாவை இருக்கையில் இருந்து எழுப்பிவிட்டு, அந்த இருக்கையில் அமர்ந்து ஆசிரியயை அமுதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாதவார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் ஆசிரியயை அமுதா மற்றும் அவரது கணவருக்கு சந்திரசேகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்


இதனை வீடியோவாக பதிவு செய்த ஆசிரியை அமுதா கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட கண்டாச்சிபுரம் காவல் துறையினர் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போதை ஆசாமி வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியயை மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களை பரவி வருகிறது.