விழுப்புரம் : திண்டிவனத்தில் கனரக வாகன விற்பனையாளரிடம் 7.50 லட்சம் ரூபாய் திருடிய ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மரக்காணம் சாலை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரின் மகன் சேகர் (48), கனரக வாகனங்கள் விற்பனையாளரான இவர், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மாலை பெருமுக்கல் பகுதியில் டிப்பர் லாரி வாங்குவதற்காக, திண்டிவனம் பகுதி வங்கியில் பணம் எடுத்து செல்ல வந்தார். அப்போது பெருமாள் கோவில் தெருவில் உள்ள இரண்டு தனியார் வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாயும், அவரது நண்பரிடம் 3 லட்சம் ரூபாயும், வாங்கிவந்து அவர் இரு சக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வைத்து பூட்டி விட்டு அங்கிருந்து சேடன் குட்டை தெருவிற்கு வந்துள்ளார். அங்கு ஒர்க் ஷாப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
மீண்டும் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில், ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் தமிழ்மணி தலைமையிலான தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெருமாள் கோவில் தெருவில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மூன்று பேரும் தெலுங்கு பேசியதால், தெலுங்கு தெரிந்த நபரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ரவி மகன் ராஜீவ் (22), பவுலரா மகன் சக்கரையா (44), மோரிஷா மகன் ரமேஷ் (39), என்பதும், சேடன் குட்டை தெருவில் பைக் பெட்டியில் 7.50 லட்சம் ரூபாய் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் விழுப்புரம், செஞ்சி, மேல்மலையனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்