விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் நேற்று முதல் பெய்து வரும் மழையின் காரணமாக 3500 ஏக்கர் பரப்பிலான உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கந்தாடு, கூனிமேடு, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வந்தது இன்று காலை முதல் தற்போது வரை பலத்த மழை பெய்து வருகிறது. மரக்காணம் பகுதியில் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உப்பளங்களில் கடந்த 4 மாதங்கள் உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று முதல் பெய்து வரும் மழையின் காரணமாக மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள 3500 ஏக்கர் பரப்பிலான உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் உப்பு உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு உப்பளங்களில் உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை பாதுகாப்பாக கரைப்பகுதியில் கோபுரமாக கொட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் தொடர் மழையால் உப்பளங்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ள உப்புகள் சேதமடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மரக்காணத்தில் உள்ள உப்பளத்தில் உற்பத்தி செய்யக்கூடிய உப்புகளை பாதுகாப்பாக வைப்பதற்கு கிடங்கு ஒன்று அமைக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும், திடீரென பெய்த மழையால் 3500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உப்பளங்களில் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.