ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் முதியவர் பூல்பாண்டியன்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த ஆழங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 73). இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூல்பாண்டியன், கடந்த 1980-ம் ஆண்டில் மனைவியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார். அங்கு சலவை தொழில் செய்து குடும்பத்தை நடத்திய நிலையில் அவரது மனைவி இறந்துபோனதால் தொழில் செய்துகொண்டே யாசகம் (பிச்சை) எடுப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். அவ்வாறு யாசகம் எடுக்கும் பணத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி சமூக பணியாற்றி வந்துள்ளார். மேலும், தான் யாசகமாக பெறும் பணத்தை கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழர்களுக்கான நிவாரணம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என பணத்தை அனுப்பி வந்துள்ளார். இதுதவிர தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 400 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, தான் யாசகம் எடுத்த பணத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை, ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து அந்த தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றார். அப்போது அவரிடம், வங்கி மூலமாக அரசு நிதியில் நேரடியாக செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து பூல்பாண்டியன் கூறுகையில், ”நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். இதுவரை ரூ.50 லட்சத்துக்கு மேல் பல்வேறு மாவட்ட கலெக்டர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதியாகவும், பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பொருட்களாகவும் வழங்கியிருக்கிறேன். எனது இறுதி வாழ்க்கை முடியும் வரை இதுபோன்ற சேவைப்பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்றார். இவருடைய இந்த சேவைப்பணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பலரும் பெரிதும் பாராட்டினர்.