ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல்


விழுப்புரம்: ஏடிஎம்-ல் பணம் நிரப்பாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக ஜெயபாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவ்வங்கியில் உதவி மேலாளராக ஆந்திரா மாநிலம் நெல்லூரை அடுத்த கொலமூடி கிராமம் எருக்குலபாலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரகு (வயது 33) என்பவர் கடந்த 11.7.2022 முதல் பணியாற்றி வருகிறார். அவருக்கு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைக்கும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் ரகு, ஏ.டி.எம். எந்திரங்களில் தொகையை சரிவர நிரப்பாமல் ஒவ்வொரு முறையும் சிறுக, சிறுக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து மறைத்து வந்துள்ளார். அந்த வங்கியில் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ததோடு ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் சோதனை செய்தனர்.


ரூ.85¼ லட்சம் கையாடல்


இதில் உதவி மேலாளர் ரகு, ஏ.டி.எம். எந்திரத்தை திறப்பதற்கு அவருக்குரிய ஒருமுறை கடவுச்சொல்லையும், மற்றும் மற்றொரு அதிகாரியான மார்டினின் கடவுச்சொல்லையும் ரகுவே பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தினுள் முழு பணத்தையும் நிரப்பாமல் சிறுக, சிறுக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்து 500 அளவிற்கு கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் வங்கியின் தலைமை அதிகாரி விசாரணை செய்ததில் பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக்கொண்டார்.


மேலும் மாதம் ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டிய தனியார் நிறுவனமும் சரியான முறையில் தணிக்கை செய்யாமல் கையாடல் தகவல்களை வங்கி கிளைக்கு தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.


உதவி மேலாளர் கைது


இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி மேலாளரான ரகு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு அவரை வலைவீசி தேடி வந்தனர்.


இந்நிலையில் நேற்று சென்னை ஆவடி பகுதியில் தங்கியிருந்த ரகுவை விழுப்புரம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.