விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலத்தில், தென்பெண்னை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வட்டங்கள் ஏனாதிமங்கலம் மற்றும் சுப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949 - 1950 ஆம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வலது புற பிரதான கால்வாய்களான எரளூர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது புற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும். மொத்தம் 13,100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.


2021-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது.


உயர்கல்வித்துறை அமைச்சர் விவசாயிகளின் துயர்துடைக்கும் வண்ணம் சேதமடைந்த அணைக்கட்டினை சீரமைத்திடும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வனத்துறை அமைச்சர் அவர்களினால் சேதமடைந்த அணைக்கட்டினை ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்ய அறிவிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, புதிய அணைக்கட்டு அமைவிடத்தை, கட்டுமான வல்லுநர்கள் கட்டுமான வடிவமைப்பு வட்டம், சென்னை அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய மண் பரிசோதனை மற்றும் ஆற்றின் புவியியல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்து கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அணைக்கட்டின் அருகில் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் வெள்ளதடுப்பு சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு கரை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.


விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வட்டங்கள், ஏனாதிமங்களலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் மூலம் எதிர்வரும் பருவ மழைக்காலத்தில் தென்பெண்ணையாற்றில் பெறப்படும் நீரினை வலதுபுற பிரதான கால்வாய்களான எரஞர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான வாய்க்கால்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் மொத்தம் 13100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அணைக்கட்டினை சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்.


அதனடிப்படையில், இன்றைய தினம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுதுவரை 99 சதவீதம் அணைகட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 1 சதவீதம் பணியானது பத்துநாட்களுக்குள் முடிக்கப்பட்டு விடும்.


நீர்வளத்துறை வல்லுநர் குழுவின் அடிப்படையில், அணைக்கட்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்டுமான முடிவிலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு அடுத்தடுத்த நிலையிலான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது அணைக்கட்டான நல்ல முறையிலும், உறுதியான நிலையிலும் கட்டப்பட்டுள்ளது.


அணையிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் முதல் 100 மீட்டர் அளவிற்கு கான்கிரிட் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வரக்கூடிய வாய்க்கால் பகுதிகள் 500 மீட்டர் வரை தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட வாய்க்கால் பகுதிகளில் கரையோரப்பகுதிகளில் மண்கொட்டப்பட்டது. தற்பொழுது பெய்த மழையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிரந்தரமாக சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு பக்கங்களில் கரைகள் அமைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அணைக்கட்டில் 500 மீட்டர் அளவிற்கு பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்திடவும் திட்ட மதிப்பீடு தயார் செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.