விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் விசாரனை தொடங்கி ஆசிரமத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் தடயங்களை சேகரித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10ஆம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆஸ்ரமம் நடத்தி வருவதும், ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது கண்டுபிடிக்கப்பட் டது.
இதனையடுத்து ஆஸ்ரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆஸ்ரம பணியாளர்கள் சதீஷ்,கோபிநாத், பிஜீ மேனன், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கினை டி ஜி பி சைலேந்திர பாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள், மருந்து மாத்திரைகள், மடிக்கணிணி, செல்போன்கள் 10 ஆகியவைகளை சிபிசிஐடி காவல் ஆய்வாளர்கள் குமார் கார்த்திகேயன் தனலட்சுமி ரேவதி ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினரிடம் எஸ்பி ஸ்ரீநாதா எஸ்பி அலுவலகத்தில் நேற்றைய தினம் ஒப்படைத்தனர்.
ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி எஸ்பி அருண் பால கோபாலன் தலைமையில் ஏடி எஸ்பி கோபதி அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் இன்று அருண் ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலி, அடிக்கப்பயன்படுத்திய தடிகள் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிரமத்தில் இருந்த தடயங்களை தடவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் தடயங்களை சேகரித்து தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரனை செய்து வருகுன்றனர். இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆசிரமதிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பெண்களை கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு இன்று மாற்றினர்.